கட்டுக்குள் வந்த கொரோனா பரவல்: ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…!!

Author: Aarthi
8 February 2021, 5:13 pm
hokenakkal - updatenews360
Quick Share

தர்மபுரி: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கொரோனா தொற்று அபாயம் காரணமாக ஓராண்டாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று கல்வி நிலையங்களில் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்படுகின்றன. இனி வாரத்தில், 6 நாள்கள் கல்வி நிலையங்கள் இயங்கும் என்பதால், நீண்ட விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல், பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். சொந்த மாவட்டம் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்தும் வார விடுமுறை நாள்களில் ஒகேனக்கல் அருவிகளில் குளித்து மகிழ வருகை தருவார்கள். ஒகேனக்கல், சுற்றுலாத் தலம் மட்டுமின்றி சினிமா படப்பிடிப்புகள் நடக்கும் இடமுமாகவும் விளங்குகிறது. முதன்மை அருவி, சினி அருவி மட்டுமின்றி தொங்கும் பாலம், முதலை பண்ணை, மீன் காட்சியகமும் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகம் அளிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேல், இருபுறமும் உயர்ந்துநிற்கும் பாறைகளுக்கு இடையே கர்நாடகா மாநில எல்லை வரை காவிரியில் உற்சாகமாகப் பரிசல் சவாரி செய்வதும் சுற்றுலாப் பயணிகளுக்கு அலாதி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வித்தியாசமான அனுபவங்களை ரசிக்கும் சுற்றுலாவாசிகளின் தவிர்க்க முடியாத இடங்களுள் ஒகேனக்கலுக்கும் முக்கிய இடம் உண்டு. நீண்ட காலத்திற்குப் பிறகு அண்மையில்தான் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுமுறை நாள்களை சுற்றுலாவாசிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் மீன் பிடித்து அங்கேயே சுவையாகச் சமைத்துச் சாப்பிட்டும் ரசித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் காலை முதலே டிபன் கடைகள், சாலையோர கடைகள், காய்கறி, பழக்கடைகளில் வியாபாரம் களைகட்டியது. மீன் விற்பனையும், விலையும் கொஞ்சம் அதிகரித்துக் காணப்பட்டது.

ஒகேனக்கலுக்கு வரும் ஆண்களில் பெரும்பாலானோர் அங்கு மசாஜ் செய்து கொள்வதும் வாடிக்கை. அதனால் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் மசாஜ் செய்து கொண்டனர். இதனால், மசாஜ் செய்துவிடும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். சமையல் கலைஞர்களும் உற்சாகமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்தது.

Views: - 76

0

0