ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதீங்க…. நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிடுங்க.. மத்திய ரயில்வேத் துறை அமைச்சருக்கு வேலூர் எம்பி கடிதம்…!!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 9:43 pm
Quick Share

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக எம்பி கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் மிக முக்கிய நகரங்களில் வேலூரும் ஒன்று. விழுப்புரம் – காட்பாடி இடையே சுமார் 160 கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்டவாள விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் திட்டம் வரவேற்கப்படக் கூடிய திட்டமாகும். இதற்காக, வேலூர் ரயில்நிலையம் அருகே வசிக்கும் மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை திருச்சி மண்டல ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ரயில் தண்டவாள விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்கள் இருந்தும், இந்திரா நகர், அவுலியா நகர், பூங்காவனத்தம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். ரயில்வே பணிகளுக்கு தேவையான நிலம் இருக்கும் போது, அந்த மக்களை வெளியேற்றுவது தேவையில்லாத ஒன்றாகும். எனவே, நில கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக, ஏழை மக்களுக்காக கோரிக்கை வைக்கிறேன்.

இது தொடர்பாக திருச்சி மண்டல ரயில்வே நிர்வாக அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 19ம் தேதி சென்னை மண்டல ரயில்வே நிர்வாகிகளை சந்தித்த திமுக எம்பி கதிர் ஆனந்த், இந்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் முன்பு வைத்தார். மேலும், காட்பாடி ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் நின்று செல்லும் கால நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காட்பாடியில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் என்பதால், ரயிலை நிறுத்தி, இயக்கும் நேரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 277

0

0