தனியார் தீவன ஆலை தொழிலாளர்களுக்கு கொரோனா : ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

19 April 2021, 8:53 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அடுத்துள்ள நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் தீவன ஆலை தொழிலாளர்களுக்கு அதிகளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் தீவன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பணியாற்றி வந்த 101 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகப்படியான தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தீவன ஆலையும் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று 22 பேருக்கும் அதேபோல் 5 கடைக்காரர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட கடையைத் தவிர மற்ற கடைகளைத் திறக்கலாம் எனவும் அதேபோல் தீவன ஆலையையும் திறக்கப்படும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் தொற்று பாதித்த தீவன ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜு, மொடக்குறிச்சி தாசில்தார் ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் வார்த்தையில் நடத்தினர். நாளை மீண்டும் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.சுமார் ஒரு மணிநேரமாக நடைபெற்ற சாலை மறியலில் போக்குவரத்து வரத்து நெரிசல் ஏற்பட்டது

Views: - 33

0

0