காவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை

Author: Udayaraman
27 July 2021, 7:32 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் மற்றும் சிறைக் காவலர், தீயணைப்பாளர் என 10,906 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர்13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. இப்பணிகளுக்காக 5.50 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 4.91 லட்சம்பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த பிப்ரவரி 19-ம்தேதி வெளியிட்டது.

இந்நிலையில், சான்றிதழ் சரி பார்த்தல், உடல்தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நேற்று காலை தொடங்கின. இதே போல் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் தேர்வர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்னும்10 நாட்கள் வரை நடக்க உள்ளது. இன்று நடைபெற்ற உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அப்போது கம்பைநல்லூர் அடுத்த சின்ன முருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் போலி சான்றிதழ் வழங்கி ஆள்மாராட்டம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை செய்த போது காரிமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரும், சசிகுமாரும் ஒரே இடத்தில் தனியார் காவலர் சிறப்பு பயிற்சி பள்ளியில் பயின்று வந்துள்ளனர். காவலர் தேர்வில் பிரகாஷ் தேர்ச்சி பெற்றுள்ளார். சசிகுமார் தோல்வியடைந்துள்ளார். இதனையடுத்து பிரகாஷின் தேர்ச்சி சான்றிதழை சசிகுமார் வாங்கி அதில் போட்டோவை மாற்றி வைத்து காவலர் உடற்தகுதி தேர்வுக்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சசிகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Views: - 195

0

0