காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூவருக்கு கொரோனா: பென்னாகரம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்

8 September 2020, 5:48 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூவருக்கு கொரோனா உறுதியானதால் பென்னாகரம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையம் மூடப்பட்டது. அதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கொரோனா கிருமி தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பென்னாகரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துள்ளது.

பின்னர் சுகாதாரத் துறையினரை அணுகி தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டனர். இதில், பென்னாகரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுகாதார துறையினர் அழைத்து சென்றனர். பின்னர் சுகாதாரத் துறை சார்பில் பென்னாகரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் உள்பட்ட 15 நபர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கப சுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஜிங்க் மாத்திரைகள் மற்றும் வைட்டமின் -சி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேலும் பென்னாகரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். பென்னாகரம் காவல் நிலையம் தற்காலிகமாக மூன்று நாட்கள் மூடப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக பேரூராட்சி நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0