தந்தையை அடித்துக் கொன்றுவிட்டு 30 வருடங்கள் தலைமறைவாக இருந்த மகன்…. போலீசில் சிக்கியது எப்படி..??

26 August 2020, 8:30 pm
Quick Share

காரைக்கால்: காரைக்கால் அருகே 2-ஆவது தந்தையை தடியால் அடித்துக் கொன்றுவிட்டு 30 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள கடம்பங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் அடைக்கல தாஸ். இவரது தந்தை ராஜமாணிக்கம் இறந்து விட்ட காரணத்தால் இவரது தாயார் சம்மனசுமேரியுடன் காரைக்காலில் வந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது அம்மா திருநள்ளாரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக சாமிக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கிற்கு தொடர்பில்லையென அடைக்கலதாசின் தாயார் சம்மனசுமேரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அடைக்கலதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் காரைக்கால் நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தலைமறைவான அவர் கும்பகோணத்தில் கூலி வேலை செய்து வருவதாக திருநள்ளாறு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருநள்ளாறு போலீசார் அவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று கைது செய்து காரைக்காலுக்கு கொண்டு வந்தனர். 30 வருடங்கள் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீசார் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புதுச்சேரி சிறைக்கு கொண்டு சென்றனர். தஞ்சாவூரில் இருந்து அவர் அழைத்து வரப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதில் கொலை செய்து தலைமறைவானவர் 30 ஆண்டுகள் கழித்து 58 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Views: - 28

0

0