நீலகிரியில் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் புதிய மொபைல் செயலி துவக்கம்

24 August 2020, 2:08 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் புதிய மொபைல் செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் துவக்கி வைத்தார்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பேசியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் காவல்துறைக்கு என தனியாக ஒரு கைபேசி செயலி ”நீலகிரி மாவட்ட காவல் செயலி” உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலாக நீலகிரி மக்கள் கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கள் குறைகளை காவல்துறைக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவோ தங்களது புகார்களை நேரடியாக வழங்க சிரமமான சூழ்நிலை உள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்று உள்ள காரணத்தினால் மக்கள் காவல் செயலியை பயன்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம்.

மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சுலபமாக தங்களது புகார்களை எங்கே யாரிடம் தெரிவிப்பது என்று குழம்பும் நிலை உள்ளது. எனவே காவல் மொபைல் செயலியை பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் தங்களது கைபேசியில் இருந்து புகார்களை நேரடியாக இதற்கென தனியாக நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க இயலும். கட்டுப்பாட்டு அறையிலிருந்து புகார் சம்பந்தப்பட்ட தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரடியாகவும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவல் நிலையங்கள், ஆகியோரின் விபரங்களையும் தொலைபேசி எண்களையும் இந்த செயலில் தெரிந்து கொள்ளலாம். மேலும் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களுக்கு விபரங்களையும் தாங்கள் இருக்கும் இடத்தில் மிக அருகே உள்ள காவல் நிலையத்தையும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், வாகன நிறுத்துமிடம், குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் , ஆகியவற்றின் பற்றிய விபத்தை தெரிந்து கொள்ளலாம் என காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்தார்.

Views: - 0

0

0