விருதுநகரில் விதிமுறைகளை மீறிய 14 பட்டாசு ஆலைகள்: உரிமம் தற்காலிக ரத்து..!!

1 March 2021, 6:42 pm
pattas - updatenews360
Quick Share

விருதுநகர்: திருத்தங்கலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 14 பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்வதற்காக வட்டாட்சியர்கள் தலைமையிலான 7 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருத்தங்கலில் பிரபலமான பட்டாசு ஆலை ஒன்றில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அந்த பட்டாசு ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டதும், இரு அறைகளுக்கு இடையே வெளிப்புறத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டதும், தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதும், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் விதிமுறைகளை மீறி மண் தரையில் உலர வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதேபோன்று, சிறப்புக் குழுவினரின் ஆய்வில் மீனம்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலை, அ.ராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலை, மேட்டமலையில் உள்ள 3 பட்டாசு ஆலைகள், இ.குமாரலிங்காபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலை, அக்கரைப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலை, வெம்பக்கோட்டையில் 4 பட்டாசு ஆலைகள், சேர்வைக்காரன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலை, ஏழாயிரம்பண்ணையில் உள்ள ஒரு பட்டாசு ஆலை என மொத்தம் 14 பட்டாசு ஆலைகளின் உரிமங்கல் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பிறப்பித்துள்ளார்.

Views: - 7

0

0