கன்னியாகுமரி கடற்கரையில் ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கும் கழிவறைகள்…! சுற்றுலா பயணிகள் அவதி

19 April 2021, 6:38 pm
Quick Share

கன்னியாகுமரி: சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பூட்டியே கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமம் மிகவும் பிரசித்தி பெற்றது. கன்னியாகுமரி வரும் யாத்திரபுனிதமாக கருதும் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை வழிபடுவது புண்ணியமாக கருதுகின்றனர்.இதைப்போல் கன்னியாகுமரிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்வார்கள். இதன் காரணமாக முக்கடல் சங்கமப் பகுதியில் மேம்படுத்தவும் இங்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யவும் மத்திய அரசு சுற்றுலா துறையின் மூலமாக நான்கு கோடி ரூபாய்க்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியது.

இத்திட்டங்களின் படி கடற்கரைப்பகுதியில் பயணிகள் ஆபத்தில்லாமல் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் கட்டப்பட்டன. மேலும் இப்பகுதி முழுவதும் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்குவதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் கடற்கரையில் இப்பகுதியில் வருகின்ற சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக கழிவறைகளும் கட்டப்பட்டன. இவ்வாறு கட்டப்பட்ட கழிவறைகள் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் தற்போது மிகவும் பழுதடைந்து பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் இயற்கை உபாதைகளை தீர்ப்பதற்கு வழியின்றி அங்குமிங்கும் அல்லாடுவது காணமுடிகிறது. சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு அரசுகள் உரிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல் படுத்தப்பட்டாலும் உள்ளூரில் இருக்கின்ற அரசு அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்காதன் காரணமாக அரசின் திட்டங்கள் மக்களுக்கு பலனளிக்காமலேயே போகிறது.

Views: - 28

0

0