மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…
24 August 2020, 3:25 pmமதுரை: மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கினை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “காவிரி நதி நீரை பெறுவது தொடர்பாக மாநிலங்களுடன் பிரச்சினை எழுந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதையடுத்து காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் காவிரி நதிநீர் ஆணையத்திடம் அனுமதி எதையும் பெறாமல் தமிழக அரசு, பொதுப்பணித் துறை சார்பில் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்டா பாசனத்திற்காக வழங்கப்படும் தண்ணீரில், உபரி நீரை குழாய் மூலமாக எடப்பாடிக்கு கொண்டு செல்லவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழக முதல்வர் இது தொடர்பாக சட்டமன்றத்தில் எவ்விதமான விவாதத்தையும் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார். தனது சொந்த தொகுதிக்கு மட்டும் நன்மையை செய்யும் வகையில், “மேட்டூர் சரபங்கா திட்டம்” எனும் பெயரில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் இதற்கான பணிகளைத் தொடங்குவதில் முனைப்பு காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. மனுதாரர் தரப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் வழக்கை வேகமாக விசாரணைக்கு பட்டியலிடும் படி கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சேலம் மாவட்டத்திலிருந்து, விவசாய சங்கம் மனுதாரருக்கு எதிராக தங்களையும் வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.