17 வருடங்களுக்குப் பிறகு அரூர் பெரிய ஏரி நிரம்பி வரும் உபரி நீர்: மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்…

Author: Udhayakumar Raman
27 November 2021, 3:56 pm
Quick Share

தருமபுரி: அரூர் பகுதி பொது மக்களின் முயற்சியால் 17 வருடங்களுக்குப் பிறகு அரூர் பெரிய ஏரி நிரம்பி வரும் உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்.

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் உபரி நீர் மற்றும் தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரும் கள்ளாறில் வெளியேறி கொளகம்பட்டி, காரை ஓட்டு என்ற இடத்தில் சிறிய தடுப்பணை நிரம்;பி அங்கிருந்து 165 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வந்தடையும். அரூர் பெரிய ஏரி ஒருமுறை தண்ணீர் நிரம்பினால் குறைந்தது 3 ஆண்டுக்கு அரூர் நகரம், தொட்டம்பட்டி, நாசினாம்பட்டி, பச்சினாம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் மற்றும் குடிநீர் பிரச்சினை தீரும். ஆனால் காரை ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், ஏரிக் கால்வாயில் தண்ணீர் திரும்பாமல், நேரடியாக தண்ணீர் வாணியாற்றில் சென்று வந்தது.

இதனால் அழகு தன்னார்வ அமைப்பினர் மற்றும் அரூர் பகுதி பொது மக்கள் இணைந்து 500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி வீணாக வெளியேறும் தண்ணீரைத் தடுத்து அரூர் பெரிய ஏரிகால்வாய்க்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வந்த நிலையில், இன்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரூர் பெரிய ஏரி நிரம்பி, இருகால்வாயிலும் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதல், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உபரி நீர் வெளியேறுவதை மலர் தூவி வரவேற்றனர். மேலும் தமிழக அரசு கார ஓட்டு தடுப்பணையின் உயரத்தை உயர்த்தி, ஏரிக்கு நிரந்தரமாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 171

0

0