பண மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முன்ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

27 August 2020, 5:54 pm
Quick Share

மதுரை: பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முன்ஜாமீன் கோரிய வழக்கை செப்டம்பர் 7 ம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து தன்னிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ராமநாதபுரம் போலீசார், 300 கோடி ரூபாய் வரை ரூபாய் மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குத் தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து, சம்மனுக்கு ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஞானவேல்ராஜா தரப்பில் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி, பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை செப்டம்பர் 7 ஆம் தேதி ஒத்திவைத்து அதுவரை ஞானவேல்ராஜாவை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

Views: - 27

0

0