லடாக் மோதலை மேற்கொண்ட சீனத் தளபதிக்கு அரசில் முக்கிய பதவியை வழங்கிய ஜி ஜின்பிங்..!

1 March 2021, 7:09 pm
General_Zhao_Zongqi_China_PLA_UpdateNews360
Quick Share

இந்தியாவுடன் கடந்த ஆண்டு லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பை மேற்கொண்ட போது, அப்பகுதியின் உயர்மட்ட சீன இராணுவ அதிகாரியாக இருந்த ஜெனரல் ஜாவோ சோங்கியை, சீனாவின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசின் (என்.பி.சி) செல்வாக்கு மிக்க வெளியுறவுக் குழுவின் துணைத் தலைவராக ஜி ஜின்பிங் நியமித்துள்ளார்.

65 வயதான ஜெனரல் ஜாவோ, 2017’இல் டோக்லாம் மோதல் மற்றும் 2020’இல் லடாக் நிலைப்பாட்டின் போது வெஸ்டர்ன் கமாண்டிற்கு தலைமை தாங்கினார். சீனாவின் விதிமுறைகளின்படி, உயர் தளபதிகளின் ஓய்வு வயது 65 ஆகும்.

என்பிசி’இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றில், என்பிசி’இன் செல்வாக்குமிக்க அமைப்பான வெளியுறவுக் குழுவின் துணைத் தலைவராக ஜெனரல் ஜாவோ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் மார்ச் 5 முதல் நடக்கும் என்பிசி’இன் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்பிசி மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (சிபிபிசிசி), அவர்களின் வருடாந்திர கூட்டத்தை ஒரு வாரம் நடத்துகிறது.

2017’இல் பூட்டான் உரிமை கோரிய பகுதியில் இந்திய எல்லைக்கு அருகில் ஒரு சாலையை அமைக்கும் சீன திட்டத்திற்கு எதிராக இந்திய ராணுவம் எதிர்த்து நின்ற 2017 டோக்லாம் மோதலின் போது வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டிற்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஜாவோ, கடந்த ஆண்டு டிசம்பரில் மாற்றபப்ட்டு ஜெனரல் ஜாங் சுடோங் நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் ஜாவோவின் கண்காணிப்பில் தான் லடாக் மோதலும் நடந்தது. கிழக்கு லடாக் எல்லைகளுக்கு இராணுவப் பயிற்சிக்காக அணிதிரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்களை சீனா அனுப்பிய பின்னர் இது கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. 

இவர் தவிர, சமீபத்தில் ஆயுதமேந்திய போலீஸ் படைகளுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் வாங் நிங், அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான என்பிசி குழுவின் துணைத் தலைவராகவும், மூலோபாய ஆதரவு படைகளின் முன்னாள் அரசியல் ஆணையாளர் ஜெனரல் ஜெங் வீப்பிங், கல்விஅறிவியல், கலாச்சாரம் மற்றும் சுகாதாரதிற்கான என்பிசி குழுவின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Views: - 11

0

0