நீங்க தெர்மாகோல் விட்டீங்கள.. நாங்க போர்வை போத்துவோம்! சீனா அடடே முயற்சி

18 January 2021, 4:46 pm
Quick Share

பருவநிலை மாற்றம் காரணமாக பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதை தடுக்க, அதன் மீது போர்வை கொண்டு போர்த்தும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது பருவநிலை மாற்றம். இதனால், பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால், கடல் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. காலநிலையில் இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதால், அதனை தடுக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சீன விஞ்ஞானிகள், பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க, அதன் மேல் போர்வைகளை கொண்டு மூடி வருகின்றனர்.

பனிக்கட்டி உருகுவதை தடுக்கும் வகையில், உயர் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ‘ஜியோடெக்ஸ்டைல்’ போர்வைகள், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக இருக்கும். இதனை பனிக்கட்டிகளின் மேல் போர்த்துவதால், பனிக்கட்டி உருகும் வேகம் குறைவதுடன், பனிக்கட்டிகளை பாதுகாக்கும் கேடயமாகவும் இந்த போர்வைகள் இருக்கும் என்கின்றனர் சீன விஞ்ஞானிகள். ஆனால் இது ஆதாரப்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

வாங்க் பெய்டெங் தலைமையில் இன்ஸ்டியூட் ஆப் நார்த்வெஸ்ட் எக்கோ – என்விரான்மென்ட் அண்ட் ரிசோர்ஸ் ஆய்வாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வின் முடிவின்படி, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இதனை செயல்படுத்த தொடங்கி உள்ளனர். சீனாவிலுள்ள சிச்சூவான் மாகாணத்தின் டாகு பகுதியில், ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை, 500 சதுர மீட்டர் அளவில் உருவாக்கி இச்சோதனையை நடத்தி வருகின்றனர்.

சுவிசர்லாந்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, ரோனே கிளேசியர் என்ற பகுதியில், இதேபோல், தெர்மல் போர்வைகள் போர்த்தி, பனி உருகுவதை தாமதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0