கொரோனாவுக்கு மத்தியில் வுஹானில் ஹாயாக நீச்சல் குள விருந்து..! வரிந்து கட்டி ஆதரவு தரும் சீன ஊடகங்கள்..!
20 August 2020, 5:27 pmகொரோனா பரவுவது குறித்த கவலைகளுக்கு மத்தியில், மக்கள் அடர்த்தியுடன் கூடிய நீச்சல் குள விருந்தின் படங்கள் வெளிநாடுகளில் வைரலாகி வந்ததை அடுத்து, சீன அரசு செய்தித்தாள்கள், வுஹானில் நீச்சல் குள விருந்துக்கு ஆதரவாக முதற்பக்கத்தில் புகைப்படத்தை பிரசுரித்துள்ளது.
ஜூலை 11 அன்று வுஹான் மாயா கடற்கரை நீர் பூங்காவில் நடந்த ஒரு மின்னணு இசை விழாவின் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளிநாடுகளில் புருவங்களை உயர்த்தின. ஆனால் கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட நகரத்தில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதை இது பிரதிபலித்தது என சீனாவின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழி ஊடகமான சீன டெய்லி செய்தித்தாள் முதல் பக்க கட்டுரையில் தெரிவித்துள்ளது.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் ஊடகத்தில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், வுஹான் குடியிருப்பாளர்களை மேற்கோள் காட்டி, நீச்சல் குள விருந்து அதன் வைரஸ் கட்டுப்பாட்டு முயற்சிகளில் நகரத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் முதன்முதலில் வுஹானில் தெரிவிக்கப்பட்டாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனப் பொருளாதாரத்தை முடக்கிய கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அதன் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
சீனா, இன்று நான்காவது நாள் தொடர்ச்சியாக உள்நாட்டில் புதிய கொரோனா தொற்று இல்லை என அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் இந்த வார தொடக்கத்தில் எச்சரித்ததை அடுத்து, மக்கள், குறிப்பாக இளைஞர்கள், சாதாரண வாழ்க்கையை வாழ விரும்பினாலும் அவர்களால் கொரோனா தொற்றை வெல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளது.
உலகளவில் 22.27 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 7,81,162 பேர் இறந்துவிட்டதாகவும் ராய்ட்டர்ஸ் கணக்கின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.