பிறக்கும் போதே கால்கள் இல்லை; ஆனால் கராத்தேவில் இவர் எவ்வளவு சாதனை படைத்திருக்கிறார் தெரியுமா?

17 January 2021, 3:31 pm
Quick Share

பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்த இந்த மாற்றுத்திறனாளி இளைஞர், கராத்தேவில், ஆரஞ்சு பெல்ட் வாங்கி சாதனை படைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகில் உத்வேகமான கதைகளுக்கு என்றும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கிறார் இந்த மாற்றுத்திறனாளி இளைஞர். காசா நாட்டை சேர்ந்த யூசெப் அபு அமிரா என்ற 24 வயது இளைஞர், அகதி முகாமில் இருந்து வந்தவர். இவர் பிறந்த போதே கால்கள் இல்லாமல் பிறந்தவர். கை ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்திருக்கிறது.

காசாவின் ஷரியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்துள்ளார். அப்பகுதியில் இருக்கும் அல்-மஷ்டால் கிளப்பில், கராத்தே கற்றுக் கொண்ட இவர், ஆரஞ்சு பெல்ட் வாங்கி அசத்தியிருக்கிறார். இவரது சண்டை திறனும் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரது வீடியோ ராய்ட்டர்ஸின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பரவி உள்ளது.

அபு அமிரா தனது இயலாமையை, பாசிட்டிவாக மாற்றி, அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து கடும் போராளியாக உலகுக்கு தன்னை நிரூப்பிக்க விரும்புகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இயலாமை என்பது மனதில் தான் இருக்கிறது; உடலில் இல்லை என்பதை உலகுக்கு நிரூபிக்க விரும்பினேன்’ என்றார். சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது கனவாம்.

அவரது பயிற்சியாளர் ஹசன் அல்-ராய், தனது மாணவரைப் பற்றிச் கூறுகையில், ‘அபு குறித்து சாதகமான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை, அவரிடம் வித்தியாசமான திறன்கள் உள்ளன. போட்டியின் போது மற்றவர்களை காட்டிலும் அவரால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது என்பதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்’ என்றார்

Views: - 0

0

0