வேலையில் பிஸியான மகள்! தினமும் தவறாமல் உணவு தரும் தந்தைக்கு குவியும் பாராட்டு!

28 February 2021, 8:23 am
Quick Share

கொரோனா காலத்தில் ஒர்க் பிரம் ஹோம்மில் பிஸியாக வேலை பார்க்கும் தனது மகளுக்கு, தந்தை ஒருவர், தினமும் புதுப்புது வெரைட்டி உணவை சமைத்து எடுத்து வந்து அவர் ரூமுக்கே தரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உயிர்க் கொல்லி கொரோனா பரவியதால், உலகம் பல மாறுதல்களை கண்டிருக்கிறது. ஆபிஸ் சென்று தான் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை மாறி, வீட்டிலிருந்தே பணியை செய்யலாம் என்ற சூழல் மாறியிருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகும், பல நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களை வீட்டிலிருந்தே பணி மேற்கொள்ள அனுமதி அளித்திருக்கின்றன.

இந்நிலையில், ஒர்க் பிரம் ஹோம்மில் வேலை செய்யும் பெண் ஒருவர் டுவிட்டரில், கடந்த 21ம் தேதி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘இதுதான் அன்பின் எல்லை! ஒர்க் பிரம் ஹோம் எனக்கு கிடைத்த வரம். என் தந்தை எனக்காக புதுப்புது உணவுகளை தினமும் தயாரித்து கொண்டு வந்து தருகிறார். உண்மையில் நான் கொடுத்து வைத்தவள்’’ என பதிவிட்டிருக்கிறார்.

18 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், வீட்டில் சமைத்த உணவை அப்பா எடுத்து வருகிறார். அறையின் கதவை திறந்து உள்ளே வரும் அந்த அப்பா, மகளுக்கு காலை வணக்கம் சொல்லி, தினமும் வெரைட்டி வெரைட்டியான உணவையும், காய்கறிகளையும், பானத்தையும் தருகிறார். இந்த வீடியோ நெட்டிசன்களின் இதயத்தை நெருட, அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள் பலரும் அந்த பாசக்கார தந்தைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ‘உண்மையில் நீ கொடுத்து வைத்த மகள். உன் தந்தை உன்னை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார்’ என ஒருவர் வாழ்த்த, மற்றொருவர், ‘என் அப்பாவும் என்னை இப்படி தான் பார்த்து கொள்வார்; நான் அவரை மிஸ் செய்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை இதுவரை 2.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 18 லட்சம் லைக்குகளையும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீடுவீட்டுகளையும் பெற்று, வைரலாக பரவி வருகிறது.

Views: - 13

0

0