பாராளுமன்றக் கலைப்பால் வலுக்கும் மோதல்..! இரண்டாக உடைகிறதா நேபாள கம்யூனிஸ்ட் கட்சி..?

21 December 2020, 6:51 pm
Nepal_Political_Crisis_UpdateNews360
Quick Share

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி நேற்று பாராளுமன்றக் கலைப்பு மூலம் நாட்டை ஒரு அரசியல் நெருக்கடியில் தள்ளியுள்ளார். அவர் நாட்டின் 275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை ஒருதலைப்பட்சமாகக் கலைத்தார். பிரதிநிதிகள் சபையை கலைப்பதற்கான முடிவு அமைச்சரவையின் நேற்றைய அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதன் பின்னர் நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இந்த நடவடிக்கைக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

முன்னதாக நேபாளத்தின் அடுத்த பொதுத் தேர்தல் 2022’இல் நடைபெறவிருந்தது. ஆனால் சமீபத்திய சிக்கல்களைத் தொடர்ந்து, புதிய தேர்தல் வரும் 2021 ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறும் என்று ஜனாதிபதி பண்டாரி அறிவித்தார்.

பிரதம மந்திரி ஒலியின் முடிவை, ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கசப்பான உள் அரசியல் சண்டையிலிருந்து பின்வாங்குவதால், அவர் தனது உயர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான கடைசி முயற்சியாக பலர் கருதுகின்றனர். பிரதமர் ஒலியின் ஆட்சி பெரும்பாலும் இடைவிடாத உள்-கட்சி சண்டையால் தொடர்ந்து அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஒலிக்கும் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகத் தலைவர்பிரச்சந்தாவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தான் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அரித்துவிட்டது என நேபாள அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிரதமர் ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிரச்சந்தாவின் நேபாள சமுதாயக் கட்சி ஆகியவை பல ஆண்டுகளாக முரண்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன், இரு கட்சிகளையும் இணைத்து தேசிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி 275 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கீழவையில் 174 இடங்களை வென்றனர். ஆனால் தேர்தலுக்கு பின்னர் இருதரப்புக்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்தது.

கூட்டணி அரசாங்கத்தை அமைத்தபோது, பிரதமர் ஒலி மற்றும் பிரச்சந்தா இடையே ஒரு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் தரப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு தலைவர்களும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் பிரதமர் பதவி வகிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பொது கவுன்சிலில் சர்மா ஒலி தொடர்ந்து தாமதப்படுத்துவதால் இந்த ஒப்பந்தம் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை.

பிரதமர் ஒலி, ஜலநாத் கானல் மற்றும் மாதவ் நேபாள் தலைமையிலான பிரிவினருக்குள் இது ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பிரதமர் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ஒலியை வெளியேற்ற வலியுறுத்தினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் ஒலி கட்சியை உடைத்து தனது சொந்த அரசியல் கட்சியை அமைக்க திட்டமிட்டார்.

ஆனால், இந்த ஆண்டு மே மாதம், நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யான்கியின் வருகையைத் தொடர்ந்து இதில் மாற்றம் தென்படத் தொடங்கியது. சீனத் தூதரால் நிர்வகிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஜூலை வரை இரு பிரிவுகளையும் ஒன்றிணைத்ததாகத் தோன்றியது. ஆனால் பின்னர் மீண்டும் பிரதமர் ஒலியின் ராஜினாமா குறித்து வலியுறுத்தப்பட்டதால், சீனத் தூதரின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகக் கருதப்பட்டது.

நேபாள அரசியலமைப்பின் பிரிவு 85 (1) மற்றும் பிரிவு 76 (7) இன் படி, நாட்டின் பிரதிநிதிகள் சபைக்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால் ஐந்து ஆண்டுகள் ஆயுள் இருக்கும். அதே சமயம், பிரதமர் ஒருதலைப்பட்சமாகக் கலைக்க நேபாள அரசியல் சட்டத்தில் அனுமதி இல்லை.

பிரதமர் ஒலியின் முடிவு ஏற்கனவே எதிர்க்கட்சிகளிடையே எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இந்த பிரச்சினை இப்போது நேபாளத்தின் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. பிரதமர் ஒலியின் முடிவு நேபாள அரசியலமைப்பை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவர் உடனடியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படுவார்.

எனினும், இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக்கினால், ஏப்ரல் பிற்பகுதியில் பொதுத் தேர்தல்கள் தொடங்கும் வரை பிரதமர் ஒலி இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார்.

Views: - 7

0

0