சீன செயலியான டிக்டாக்கிற்கு பாகிஸ்தானிலும் தடை..! காரணம் என்ன ..?

Author: Sekar
9 October 2020, 7:05 pm
tiktok_updatenews360
Quick Share

இந்தியா மற்றும் அமெரிக்கா டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ.) இன்று சீன செயலியான டிக்டாக்கை அதிரடியாக தடை செய்துள்ளது.

சட்டவிரோத ஆன்லைன் உள்ளடக்கத்தை விரைவாக நிர்வகிப்பதற்கான ஒரு பயனுள்ள செயல்முறையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை நிறுவனம் முழுமையாக பின்பற்றத் தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கில் பதிவேற்றப்படும் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்திற்கு எதிராக சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடமிருந்து தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஏ. தெரிவித்துள்ளது.

பி.டி.ஏ ஒரு அறிக்கையில், “டிக்டாக்கில் தொடர்ந்து வெளியிடப்படும் உள்ளடக்கத்தின் புகார்கள் மற்றும் தன்மையைக் கருத்தில் கொண்டு, பி.டி.ஏ செயலிக்கு, சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை தடை செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்க காலக்கெடு நிர்ணயித்து இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது.

ஆனால் டிக்டாக் செயலி அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக இணங்கத் தவறிவிட்டது. எனவே, நாட்டில் டிக்டாக் செயலியை தடுப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டன.” எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டினால் டிக்டாக்கை தடை செய்துள்ள நிலையில், சீனாவின் உதவியுடன் நாட்டை நடத்தி வரும் பாகிஸ்தான் டிக்டாக் மீதான தடையில் உறுதியாக இல்லாமல், விரைவில் சீனாவின் அழுத்தம் காரணமாக பின்வாங்கும் எனக் கூறப்படுகிறது.

Views: - 67

0

0