காஷ்மீரைக் கண்டு கொள்ளாத சவூதி..! கடுமையாக விமர்சித்த குரேஷி..! உள்நாட்டிலேயே அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

11 August 2020, 2:51 pm
Imran_Khan_Qureshi_UpdateNews360
Quick Share

காஷ்மீர் பிரச்சினையில் சவூதி அரேபியா தலையிட மறுத்ததை அடுத்து பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, சவுதி அரேபியாவுக்கு எதிராக பேசிய கருத்துக்கள் உள்நாட்டில் அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.

பாகிஸ்தான் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை சவுதி அரேபியாவிற்கு திருப்பிச் செலுத்தும்போது அவர்களது உறவுகளில் சிக்கல்கள் உருவாகியுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. உய்குர் முஸ்லீம்களை இன அழிப்பு செய்யும் சீனாவுடன் மிக நெருக்கமாக நட்பு பாராட்டுவதால், பாகிஸ்தான் படிப்படியாக மற்ற முஸ்லீம் நாடுகளின் ஆதரவையும் இழந்து வருகிறது என்ற உண்மையை இது பிரதிபலித்தது.

சமீபத்தில் இரண்டு பாகிஸ்தான் ஊடகவியலாளர்கள் ரவூப் கிளாஸ்ரா மற்றும் அமீர் மாத்தீன் ஆகியோர், சவூதி அரேபியாவின் பாகிஸ்தான் கொள்கை திடீரென மாற்றப்படுவது குறித்து கலந்துரையாடினர்.

இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டதற்காக குரேஷியை விமர்சித்த மாத்தீன், “சில நேரங்களில் குரேஷி உணர்ச்சிவசமாக பேசுகிறார். அவர் அதை அப்படியே எடுத்துச் செல்கிறார்.” எனக் கூறினார்.

நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் சவுதி அரேபியாவைச் சார்ந்து இருப்பதால், குரேஷி எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதில் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.

“நாம் சவுதி அரேபியாவை மிகவும் நம்பியுள்ளதால், ஒரு வரம்பிற்கு உட்பட்டே புகார் செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், முகமது பின் சல்மான் இளமையாகவும், உணர்ச்சிவசப்படுபவராகவும் இருப்பதால் குரேஷி கவனமாக இருக்க வேண்டும்.” என அவர் மேலும் கூறினார்.

மாத்தீன் மேலும், “சவுதி அரேபியா பாகிஸ்தானின் நண்பராக இருப்பதால் அது தானாகவே காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இது கல்லூரி அல்ல சர்வதேச அரங்கம் என்பதை குரேஷி உணர வேண்டும்.” என்றார்.

முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370’வது பிரிவை இந்தியா ரத்து செய்ததிலிருந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாரும் முன்வராததால் குரேஷி கோபத்தில் சவூதியை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் டான் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தை உடனடியாக வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சவுதி அரேபியா தயக்கம் காட்டியதாக பாகிஸ்தான் இராஜதந்திர வட்டாரம் உறுதிப்படுத்தியது.

மே 22 அன்று காஷ்மீரில் ஓஐசிஉறுப்பினர்களிடமிருந்து பாகிஸ்தான் ஆதரவு பெறத் தவறிய பின்னர், பிரதமர் இம்ரான் கான், “எங்களுக்கு போதுமான குரல் இல்லை. மேலும் நம்மிடைய ஒரு பிளவு அதிகமாக உள்ளது. இதனால் காஷ்மீர் தொடர்பான ஓஐசிகூட்டத்தில் நாம் ஒருமித்த முடிவை எடுக்கவே முடியாது.” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமியப் பிரச்சினையை தனது நிகழ்ச்சி நிரலில் எழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்பட்டாலும், இந்தியாவின் நட்பு நாடான மாலத்தீவு இந்த நடவடிக்கையைத் தடுத்து, “சிலரின் தனிப்பட்ட அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை வைத்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது.” எனக் கூறியது.

இந்தியாவின் சூழலில் இஸ்லாமிய போபியாவைக் குற்றம் சாட்டுவது உண்மையில் தவறானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மாலத்தீவு நிரந்தர பிரதிநிதி தில்மீசா உசேன் கூறினார்.