குஜராத்தின் ஜூனாகத்தும் பாகிஸ்தானுக்கு சொந்தமாம்..! புதிய வரைபடம் வெளிட்டு பாகிஸ்தான் அடாவடி..!
4 August 2020, 8:33 pmஇந்தியாவை நோக்கிய மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களை பாகிஸ்தானின் ஒரு அங்கமாகக் காட்டும் புதிய அரசியல் வரைபடத்திற்கு பாகிஸ்தான் அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. சர்ச்சைக்குரிய வரைபடம் குஜராத்தில் உள்ள ஜூனாகத் மற்றும் சர் கிரீக் ஆகியவை பாகிஸ்தானின் எல்லைக்குள் இருப்பதாகக் காட்டுகிறது.
புதிய அதிகாரப்பூர்வ வரைபடம் ஜம்மு காஷ்மீரை இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் என்று விவரிக்கிறது. இனிமேல் இந்த வரைபடம் நாடு முழுவதும் பாடத்திட்டங்களில் பயன்படுத்தப்படும் என்பதை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தியது.
முன்னதாக, பிரதமர் இம்ரான் கான் ஒரு அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் மற்றும் பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடத்திற்கு ஒப்புதல் அளித்தார். பாகிஸ்தானின் ஒரு அங்கமாக வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தை முதன்முறையாக உள்ளடக்கியது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வரைபடத்தை வெளியிட்ட பின்னர், இம்ரான் கான் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகிஸ்தான் மக்களும் இந்த வரைபடத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். இந்த வரைபடம் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசாங்கத்தின் ஆகஸ்ட் 5 முடிவுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
எனினும், காஷ்மீர் பிரச்சினையின் தீர்வு ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களில் மட்டுமே உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் மேலும் கூறினார். “காஷ்மீர் பிரச்சினையை இராணுவத்தின் மூலமாக இல்லாமல் அரசியல் வழிமுறைகள் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அவர் மேலும் கூறினார்.
புதிய அரசியல் வரைபடம் குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்ததற்காக ஒட்டுமொத்த தேசத்தையும், இம்ரான் கானையும் வாழ்த்தினார்.
“வரலாற்றில் முதல்முறையாக நமது அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உலகிற்கு முன் வெளிப்படையாக முன்வைத்துள்ளது.” என்று அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய பிரதேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஐ.நா.’வின் கண்காணிப்பில் காஷ்மீர் பிராந்தியத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று குரேஷி கூறினார். “முழு காஷ்மீர் பிராந்தியமும் சர்ச்சைக்குரியது என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கு ஒரு தீர்வு தேவை” என்று அவர் மேலும் கூறினார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், உலக நாடுகளிடம் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்க முடியாத பாகிஸ்தான், தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக், ஜூனாகத் போன்ற பகுதிகளை தங்கள் வரைபடத்தில் இணைத்துள்ளது விரக்தியின் வெளிப்பாடு என பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் இந்த வரைபடம் மூலம் சுதந்திர காஷ்மீர் வேண்டும் என போராடும் நபர்களின் ஆதரவையும் பாகிஸ்தான் இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.