போதைப்பொருள் கும்பலுடன் பிரேசிலில் போலீசார் கடும் துப்பாக்கிச் சண்டை..! 25 பேர் பலி..!

8 May 2021, 9:56 pm
rio-de-janero-updatenews360
Quick Share

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கடந்த வியாழக்கிழமை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். இது ரியோ டி ஜெனிரோ மாகாணத்தின் மிக மோசமான போலீஸ் சோதனைகளில் ஒன்றாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் பலியானவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவார். மீதமுள்ளவர்கள் அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் கும்பல் தலைவனும் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

ரியோ டி ஜெனிரோ மாநிலத்திற்கு கடந்த 16 ஆண்டுகளில் மிக மோசமான போலீஸ் நடவடிக்கையாக இது இருந்தது. இது பல தசாப்தங்களாக போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைக் குழுக்களிடமிருந்து விமர்சனங்கள் வந்துள்ளது. பெரும்பாலும் கறுப்பின மற்றும் ஏழை மக்களால் வசிக்கும் ஒரு சுற்றுப்புறத்தில் கண்டிக்கத்தக்க மற்றும் நியாயப்படுத்த முடியாத உயிர் இழப்புக்கு காவல்துறையினரை அம்னெஸ்டி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக ரியோவின் வடக்கு புறநகரில் உள்ள பைக்சாடா புளூமினென்ஸில் 2005’ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு இது தான் மிகப்பெரிய தாக்குதலாகும்.

போதைப்பொருள் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஒரு செய்தி மாநாட்டில் போலீசார் காண்பித்தனர். ஆறு தாக்குதல் துப்பாக்கிகள், 15 கைத்துப்பாக்கிகள், ஒரு இயந்திர துப்பாக்கி, 14 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு சுற்று பீரங்கி வெடிமருந்துகள் அதில் இடம் பெற்றிருந்தன.

Views: - 156

0

0