ரஷ்யாவில் எதிர்கட்சித் தலைவரின் கைதுக்கு எதிராக வெடித்தது போராட்டம்..! 3,000 பேரைக் கைது செய்து சிறையிலடைத்த போலீஸ்..!

24 January 2021, 2:01 pm
Russia_Protests_UpdateNews360
Quick Share

ரஷ்யாவில் சிறைவைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி நடந்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 3,000’க்கும் மேற்பட்டவர்களை ரஷ்ய போலீசார் கைது செய்தனர்.

ரஷ்யாவில் கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், மைனஸ் 50 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலையில் உள்ள நகரங்களில் கூட நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் அரசியல் மற்றும் கலாச்சார மையங்களுக்கு அப்பால் நவல்னி பெற்றுள்ள செல்வாக்கை வெளிக்காட்டியுள்ளதாக ரஷ்ய அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாஸ்கோவில், நகர மையத்தில் புஷ்கின் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் பகுதிகளிலும் 15,000’க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். அங்கு போலீசாருடன் மோதல்கள் வெடித்தன. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சிலர் தடியடிகளால் தாக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நவல்னியின் மனைவி யூலியாவும் இருந்தார்.

போலீசார் இறுதியில் ஒருவழியாக ஆர்ப்பாட்டக்காரர்களை சதுக்கத்திலிருந்து வெளியேற்றினர். ஆயிரக்கணக்கானோர் பின்னர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பரந்த பவுல்வர்டில் மீண்டும் அணிதிரண்டனர். பிறகு அங்கிருந்தும் போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

பின்னர் சிலர் நவல்னி சிறை வைக்கப்பட்டுள்ள சிறை அருகே போராட்டத்திற்கு சென்றனர். காவல்துறையினர் அங்கு உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கையிலான கைதுகளை மேற்கொண்டனர்.

நவல்னியும் அவரது ஊழல் எதிர்ப்பு பிரச்சாரமும் அதிகாரப்பூர்வ அரசாங்க அடக்குமுறை மற்றும் அரசு ஊடகங்களால் வழக்கமாக புறக்கணிக்கப்பட்ட போதிலும், மக்களிடையே நவல்னிக்கு மிகப்பெரிய ஆதரவை உருவாக்கியுள்ளது ரஷ்ய ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“நிலைமை மோசமடைந்து வருகிறது, இது முழு சட்டவிரோதமானது” என்று மாஸ்கோவில் நவல்னி ஆதரவாளரான ஆண்ட்ரி கோர்கியோவ் கூறினார். “நாங்கள் அமைதியாக இருந்தால், அது என்றென்றும் தொடரும்.” என அவர் மேலும் கூறினார்.

ரஷ்யாவில் அரசியல் கைதுகளை கண்காணிக்கும் ஒரு குழு, மாஸ்கோவில் குறைந்தது 1,167 பேரும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டத்தில் 460’க்கும் மேற்பட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, சுமார் 90 நகரங்களில் 3,068 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் ரஷ்ய போலீசார் கைது குறித்த புள்ளிவிவரங்களை வழங்கவில்லை.

இதற்கிடையே நவல்னியின் ஆதரவாளர்கள் அடுத்த வார இறுதியில் மீண்டும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

Views: - 0

0

0