ஊழல் புகாரில் பதவி விலக நிர்பந்தம்..! இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்..!

2 August 2020, 1:40 pm
Benjamin_Netanyahu_UpdateNews360
Quick Share

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே நேற்று மாலை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றனர்.

டைம்ஸ் ஆப் இஸ்ரேல் கருத்துப்படி, இது சமீபத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிய பின்னர் தலைநகரில் நடைபெறும் மிகப்பெரிய பேரணி ஆகும்.

பிரதமரின் இல்லத்திற்கு முன்பு சுமார் 10,000 பேர் போராட்டங்களில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடலோர நகரமான சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் தனியார் வீட்டிற்கு வெளியே சுமார் ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவை தவிர, நாடு முழுவதும் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாலங்களில் பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“போலீஸ் அதிகாரிகள், குடிமக்கள் அல்லது சொத்துக்களுக்கு எதிரான வன்முறையின் காட்சியாக ஆர்ப்பாட்டத்தை மாற்ற இஸ்ரேல் காவல்துறை யாரையும் அனுமதிக்காது. வன்முறை, கலவரங்கள், சட்டத்தை மீறுதல் மற்றும் பொது ஒழுங்கிற்கு ஆபத்து மற்றும் காழ்ப்புணர்ச்சி ஆகியவை உறுதியாகக் கையாளப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இஸ்ரேல் காவல்துறை ஒரு அறிக்கையில் போராட்டக்காரர்களை எச்சரித்துள்ளது.

தற்போது பிரதமர் நெதன்யாகு லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.

ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான பல வழக்குகளில் நெதன்யாகு சில ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறார். இதனால் நெதன்யாகு தனது பதவியிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் ஒரு வருடத்தில் மூன்று விரைவான பொதுத் தேர்தல்களுடன் இஸ்ரேல் ஒரு நீண்ட அரசியல் அதிகார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், நெதன்யாகுவிற்கு எதிரான அரசியல் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போகும் நிலையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 10

0

0