“ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒரு பலவீனமான அமைப்பு”..! ஐநா பொதுச் சபையில் பொங்கியெழுந்தது இந்தியா..!

17 November 2020, 10:48 am
UNSC_Impaired_Organ_India_UpdateNews360
Quick Share

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) ஒரு பலவீனமான அமைப்பாக மாறி விட்டது என்று இந்தியா கூறியுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐநா அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு அதன் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், எந்த தீர்மானத்தையும்  செய்யும் வீட்டோ அதிகாரங்களுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருந்து வருகின்றன.இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அவை பெரிய நாடுகளாக இருந்ததால் அவர்கள் தங்களை நிரந்தர உறுப்பினர்களாக நியமித்துக் கொண்டனர்.

ஆனால் கால மாற்றத்தில் உலகின் மிகப்பெரும் பொருளாதாரங்களாக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உயர்ந்துள்ள நிலையில், அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மேலும் ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கும் ஐநாவில் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இதனால் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்பட்டு பன்மைத்துவத்தை நிலைநாட்ட ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. 

இதற்கு தற்போதைய நிரந்தர உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு உள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என எண்ணுவதால், சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் ஐநாவில் காலத்திற்கு ஏற்றாற்போல் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் முடங்கியுள்ளது.

இதைத்தான் தற்போது இந்தியா கடுமையாக விமர்சித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலை ஒரு பலவீனமான அமைப்பு எனக் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் (யு.என்.ஜி.ஏ) 75’வது அமர்வில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் ஒரு தீவிரமான விசயத்தில் முடிவு எட்டப்படாமல் பல்கலைக்கழக விவாதம் போல் மாறிவிட்டது என்று குறிப்பிட்டார்.

“இன்றைய பாதுகாப்பு கவுன்சில் ஒரு பலவீனமான அமைப்பு. அதன் பிரதிநிதித்துவ தன்மை காரணமாக முக்கியமாக நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியவில்லை. ஆனால், நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை செயல்முறைக்குள் என்ன நடக்கிறது என்பது மர்மமாக இருக்கிறது” என்று திருமூர்த்தி கேள்வியெழுப்பினார்.

நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக, சீர்திருத்தத்தின் அவசியம் குறித்த உணர்ச்சிபூர்வமான அறிக்கைகளைக் கேட்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று அவர் மேலும் கூறினார்.