வுஹான் சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு..! கொரோனா தோற்றம் குறித்த மர்மம் முடிவுக்கு வருமா..?
14 January 2021, 11:30 amஉலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் குழு இன்று சீனாவின் வுஹான் நகரத்தைச் சென்றடைந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து அரசியல் ரீதியாக முக்கியமான ஆய்வை நடத்த உள்ளது.
உலக சுகாதார அமைப்பால் வுஹானுக்கு அனுப்பப்பட்ட 10 பேர் கொண்ட குழு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்தால் பல மாதங்கள் இராஜதந்திர ரீதியிலான மோதலுக்குப் பின்னர் அங்கீகரிக்கப்பட்டது.
2019’ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் இருந்து 1.9 மில்லியன் மக்களைக் கொன்ற வைரஸ் வவ்வால்கள் அல்லது பிற விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த நோய் பரவ அனுமதித்ததாக பரவலான புகார்கள் உலக அளவில் எழுந்துள்ள நிலையில், வைரஸ் இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகள் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீன அரசு ஊடகமான சி.ஜி.டி.என் உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவின் வருகையை அறிவித்தது. உறுப்பினர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, நெதர்லாந்து, கத்தார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வைரஸ் மற்றும் பிற நிபுணர்கள் உள்ளனர்.
சீன அரசாங்க செய்தித் தொடர்பாளர் இந்த வாரம் அவர்கள் சீன விஞ்ஞானிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று கூறினார். ஆனால் அவர்கள் ஆதாரங்களைச் சேகரிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பதற்கான எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை.
சிஜிடிஎன் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் வெளியாகியுள்ள ஒரு பதிவின் படி, அவர்கள் இரண்டு வார தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது வீடியோ கான்பெரன்ஸ் மூலம் சீன நிபுணர்களுடன் பணியாற்றத் தொடங்க உள்ளனர்.