மீண்டும் விஷால் – முத்தையா கூட்டணி: மருது 2?

3 February 2021, 1:29 pm
Quick Share


இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விஷால் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


சசிகுமார், லட்சுமி மேனன் ஆகியோரது நடிப்பில் வந்த குட்டிப் புலி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா. தொடர்ந்து குடும்பக் கதைகளை ஆக்‌ஷன் கதையாக கொடுத்து வருகிறார். கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு பெற்றன. அண்மையில், விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோரது நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


இந்தப் படத்தில் ஹீரோவை, வில்லன் கொலை செய்வதும், அதற்கு ஹீரோவின் மனைவி தனது குடும்பத்துடன் சேர்ந்து வில்லனை கொன்று பழி தீர்ப்பது இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியான இந்தப் படம் டிஆர்பியில் நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில், மருது படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஷால் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் குடும்பக் கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளில் துப்பறிவாளன் 2, சக்ரா, எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி சக்ரா படம் திரைக்கு வருகிறது.


தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகள் என்பதால், ஒரு மாறுதலுக்கு குடும்பக் கதையில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளார். இதனால், இயக்குநர் முத்தையாவிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. குடும்பக் கதை அதுவும் கிராமத்து மண்வாசனையில் உருவாகும் படத்தில் நடிக்க விஷால் ரெடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் மருது படத்தின் 2 ஆம் பாகமாக கூட இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0