அருமையான பாசிப்பருப்பு, வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி…???

23 February 2021, 6:47 pm
Quick Share

வாழைத்தண்டு கூட்டு ஒரு சுவையான சைட் டிஷ். இது காரக் குழம்பு, ரசம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட்டால் செம சூப்பராக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சப்பாத்தி, பூரி, தோசை ஆகியவற்றுடனும் இதனை சாப்பிடலாம். வாழைத்தண்டில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது எளிதாக ஜீரணம் ஆகி விடும். இப்போது பாசிப்பருப்பு சேர்த்து வாழைத்தண்டு கூட்டு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சிறு பருப்பு – 1/4 கப்

வாழைத்தண்டு – 1 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு 

கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

குழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

அரைக்க :-

தேங்காய் – 1/4 கப்

சீரகம் – 1/2 தேக்கரண்டி

சோம்பு – 1/2 தேக்கரண்டி

இஞ்சி – 1/2 துண்டு

பூண்டு 4 பற்கள்

பச்சை மிளகாய் – 1

தாளிக்க :-

தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 2

கருவேப்பிலை- ஒரு கொத்து 

கொத்தமல்லி – சிறிதளவு

கடுகு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:

பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு செய்வதற்கு ஒரு குக்கரில் வெங்காயம், தக்காளி, பாசிப்பருப்பு, வாழைத்தண்டு மற்றும் இதற்கு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். இது வேக கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் வர விடவும்.

விசில் வரும் இந்த சமயத்தில் நாம் தேங்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 

கொதிக்கும் போது மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும். இதன் பச்சை வாசனை போன பிறகு அடுப்பை அணைத்து விடலாம். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். கடைசியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Views: - 16

0

0