சாப்பிடத் தூண்டும் சுடசுட சுவையான பன்னீர் கிரேவி!!!

25 March 2020, 6:31 pm
Quick Share

பன்னீரை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். இன்று நாம் பார்க்க இருப்பது பன்னீர் கிரேவி. இந்த கிரேவி பிரைட் ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பூரி, இட்லி மற்றும் தோசைக்கு சுவையாக இருக்கும். அதனை எப்படி செய்வதென பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர்- 200 கிராம்

பெரிய வெங்காயம்- 3

தக்காளி- 2

பட்டை- 2

கிராம்பு- 3

ஏலக்காய்- 2

அன்னாசிப்பூ- 1

பிரியாணி இலை- 2

தயிர்- 1/2 கப்

வெண்ணெய்- 50 கிராம்

கஸ்தூரி மேத்தி- சிறிதளவு

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

கரம் மசாலா- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

சோம்பு- 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

எண்ணெய்- 3 தேக்கரண்டி

கொத்தமல்லி- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் காய்ந்த பிறகு 200 கிராம் பன்னீரை வெட்டி அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். இருபக்கமும் சிவந்து வந்த பிறகு தனியே எடுத்து வைத்து விடுங்கள்.

இதே கடாயில் எண்ணெயோடு 50 கிராம் வெண்ணெய் போட்டு உருக்கவும். வெண்ணெய் உருகிய பிறகு இரண்டு பட்டை, மூன்று கிராம்பு, இரண்டு ஏலக்காய், 

ஒரு அன்னாசிப்பூ, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு மற்றும்

இரண்டு பிரியாணி இலை போட்டு கிளறியதும் மூன்று நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நமக்கு கிரேவியாக வேண்டும் என்பதால் இரண்டு தக்காளியை அரைத்து அதனையும் சேர்த்து வதக்குங்கள்.

தக்காளி வதங்கிய பிறகு அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் போட்டு கிளறுங்கள். கூடவே 1/2 கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி பின் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து விடலாம்.

எண்ணெய் திரிந்து வந்தவுடன் பொரித்து வைத்த பன்னீரை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு கஸ்தூரி மேத்தியை கசக்கி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.