இன்று டீயுடன் இந்த மொரு மொரு சிக்கன் வடையை செய்து சாப்பிடுங்கள்!!!

15 August 2020, 9:05 pm
Quick Share

கட்லட்னாலே நம்ம எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் சிக்கன் கட்லட்னா சொல்லவே வேண்டாம். சும்மா அதிரடியா  இருக்கும். வாங்க இப்போ சிக்கன் கட்லட் எப்படி செய்வதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன்- 1/2 கிலோ

வெங்காயம்- 2

உருளைக்கிழங்கு- 2

முட்டை- 2

பிரட் தூள்- 1 கப்

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

எண்ணெய்- தேவையான அளவு

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா- 1 தேக்கரண்டி

மிளகு தூள்- 2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

கொத்தமல்லி தழை- ஒரு கை அளவு

செய்முறை:

இந்த சிக்கன் கட்லட் செய்ய எலும்பு இல்லாத அரை கிலோ சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் வையுங்கள். பிறகு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றி நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1/4 தேக்கரண்டி  மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, இரண்டு தேக்கரண்டி  மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறவும். இப்போது நாம் அரைத்து வைத்த எலும்பு இல்லாத சிக்கனை சேர்த்து மேலும் நன்றாக கிளறவும். வெங்காயம் சிக்கனோடு கலக்கும் படி கிளறவும்.

இப்போது கட்லட்டுக்கு தேவையான அளவு உப்பு, மிளகு தூள் போட்டு சிக்கனை  வேக வைக்கவும். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். இதற்கு இடையில் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். சிக்கன் வெந்த பிறகு நாம் மசித்து வைத்த உருளைக்கிழங்கோடு சிக்கனை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 

மேலும் அதனோடு ஒரு கை அளவு கொத்தமல்லி தழையும் சேர்த்து பிசையுங்கள். பிறகு இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி அதற்கு தேவையான அளவு மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் பிசைந்து வைத்த சிக்கன் கலவை மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறு உருண்டையாக்கி லைட்டாக கட்லட் போல் அழுத்திவிடவும். இல்லையெனில் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் கூட செய்து கொள்ளலாம்.

நாம் செய்து வைத்த கட்லட்டை முதலில் முட்டையில் முக்கி நன்றாக கோட் செய்யுங்கள். பிறகு பிரட் தூளில் பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி அனைத்து கட்லட்டையும் செய்து வைத்து விடுங்கள்.

இப்போது ஒரு கடாயில்  நான்கு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றி கட்லட்டை ஷாலோ ஃபிரை செய்யுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறு பக்கத்தையும் வேக வைக்கவும்.  உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் கட்லட்டை பொரித்து கூட எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வளவு தான் மொரு மொரு சிக்கன் கட்லட்  தயார்.