சட்டென்று தயார் செய்யலாம் சூடான சுவையான நெய்யப்பம்!!!

30 July 2020, 5:40 pm
Quick Share

வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்தால் அவர்களுக்கு என்ன தின்பண்டம் கொடுப்பது என இனி யோசிக்க வேண்டாம். இந்த ருசியான நெய்யப்பம் செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள். பத்து நிமிடத்தில் இதனை சுலபமாக தயார் செய்து விடலாம். இப்போது நெய்யப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம்- 2
  • அரிசி மாவு- ஒரு கப்
  • வெல்லம்- 100 கிராம்
  • தேங்காய் துண்டுகள்- 1/2 கப்
  • ஏலக்காய் பொடி- ஒரு தேக்கரண்டி
  • சோடா உப்பு- 1/4 தேக்கரண்டி
  • நெய்- தேவையான அளவு

செய்முறை:

நெய்யப்பம் செய்ய முதலில் இரண்டு வாழைப்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். 100 கிராம் வெல்லம் கரையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். 

இந்த தண்ணீரில் 100 கிராம் வெல்லத்தை போடவும். வெல்லம் கரையும் வரை கொதிக்கட்டும். வெல்லம் கரைந்த பின் அதனை வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுல் ஒன்றில் அரைத்த வாழைப்பழம், வெல்லப்பாகு மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 

இதனோடு ஒரு கப் அரிசி மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும். பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் 1/2 கப் சேர்த்து கொள்ளவும். இப்போது பனியார சட்டியை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் நெய் ஊற்றவும். நெய் உருகியதும் அதில் மாவை ஊற்றலாம். ஒரு பக்கம் சிவந்து வந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு எடுத்து சூடாக சாப்பிட வேண்டியது தான்.