உங்களுக்கு நிச்சயம் இந்த மொறு மொறு பிரட் சமோசா பிடிக்கும்…. சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க!!!

14 September 2020, 11:00 am
Quick Share

வெவ்வேறு விதமான சமோசா செய்து பார்த்திருப்பீர்கள்….. இன்று நாம் பார்க்க போவது வித்தியாசமான பிரட் சமோசா. இது மிகவும் ருசியாகயும் மொறு மொறுவென்றும் இருக்கும். மாலை நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் நிச்சயம் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 

தேவையான பொருட்கள்:

பிரட்- 10

வெங்காயம்- 1/4

பச்சை பட்டாணி- 1/4 கப்

உருளைக்கிழங்கு- 2

பூண்டு- 2 பற்கள்

இஞ்சி- ஒரு துண்டு

பச்சை மிளகாய்- 1

சீரகம்- 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/8 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

உப்பு- சுவைக்கு ஏற்ப

செய்முறை:

பிரட் சமோசா செய்வதற்கு முதலில் சமோசா உள்ளே வைக்க கூடிய பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி சீரகம், 1/4 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஒரு பச்சை மிளகாய், 2 பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து அந்த விழுதையும் சேர்த்து வதக்கவும். 

இப்போது 1/4 கப் ஃபிரஷ் பச்சை பட்டாணி, 2 வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கொள்ளவும். ஃபிரஷ் பச்சை பட்டாணி இல்லையென்றால் காய்ந்த பட்டாணியை வேக வைத்து சேர்த்து கொள்ளலாம். அடுத்து 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இவற்றை ஒரு நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து விடலாம். 

ஒரு பிரட் எடுத்து அதனை சப்பாத்தி கட்டையால் நன்றாக உருட்டி கொள்ளுங்கள். ஓரங்களை வெட்டி விட்டு அதனை இரண்டாக வெட்டி வையுங்கள். இப்போது பிரட்டை சமோசா போல மடித்து நாம் செய்து வைத்த மசாலாவை உள்ளே வைக்கவும். தண்ணீர் தொட்டு அதனை ஒட்டி கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி அது மிதமான சூட்டில் வந்த பிறகு சமோசாவை போட்டு பொரித்து எடுத்து கொள்ளலாம். 

Views: - 0

0

0