முதுமையிலும் துடிப்புடன் இருக்க தேவையான வலுவான எலும்புகளைப் பெற என்ன செய்ய வேண்டும்???

Author: Hemalatha Ramkumar
7 June 2023, 6:24 pm
Quick Share

நமது உடலில் உள்ள எலும்புகள் தான் நமது வலிமைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே எலும்புகளை நாம் எந்த அளவிற்கு வலிமையாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்மால் துடிப்புடனும் வேகத்துடனும் செயல்பட முடியும். எலும்புகளை வளர்ச்சி அடைய செய்யவும், தேய்மானத்தை குறைக்கவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து உடையாமல் பாதுகாக்கவும் நமக்கு கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, புரதச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் தாது சத்துக்கள் போன்ற சத்துக்கள் மிக அவசியமாகும்.

எலும்புகளுக்கு அத்தியாவசியமான சத்து கால்சியம் ஆகும். ஆனால் நமது உடல் கால்சியம் சத்தை உற்பத்தி செய்ய இயலாது. உணவு பொருட்களைக் கொண்டுதான் நமது உடலில் கால்சியம் சத்தை சேர்க்க முடியும். எனவே பால், முட்டை, ப்ராக்கோலி, பாதாம், ஓட்ஸ், சோயா, பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்ற கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை உண்ண வேண்டும்.

வைட்டமின் சி எலும்புகளில் உள்ள கொலாஜின் அடுக்களின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளைப் பாதுகாக்க உதவுகிறது. இது ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை கொண்ட சிட்ரஸ் பழங்களில் உள்ளது. எனவே வாரத்திற்கு இரு முறையாவது இது போன்ற பழங்களை எடுத்து கொள்வது அவசியம்.

வைட்டமின் கே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும். குறிப்பாக தேய்ந்த, பாதிக்கப்பட்ட, உடைந்த எலும்புகளை விரைவில் சரி செய்ய வைட்டமின் கே உதவுகிறது. இது அதிக அளவில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், துளசி, கொத்தமல்லி போன்றவற்றில் காணப்படுகிறது. எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

புரதச்சத்தானது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தை குறைக்கிறது. எனவே இது எலும்புகளுக்கு மிகவும் இன்றியமையாத சத்து ஆகும். எனவே அதிக புரதசத்து நிறைந்த முட்டை, பால், ஓட்ஸ், போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

எலும்புகளின் கால்சியத்தை அதிகரிக்க உதவுவது பாஸ்பரஸ் ஆகும். இவை இறைச்சி, மீன், பால், அவகடோ, திராட்சை, அத்திப்பழம் , போன்றவற்றில் உள்ளது. எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றை வாரத்தில் குறைந்தது இருமுறையாவது உண்ணுவது மிக அவசியமாகும்.

கடல் உணவுகளில் பொதுவாக அதிக மினரல்கள் மற்றும் எலும்புகள் உறுதியாவதற்கு தேவையான வைட்டமின் டி சத்து கடல் உணவுகளில் அதிகமாக இருக்கின்றது. உங்கள் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவை. மீன், நண்டு போன்ற கடல் உணவுகளில் வைட்டமின் டி சத்துடன் கால்சியம் மற்றும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை எலும்பின் அடர்த்தியை அதிகரித்து வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 348

0

0