ரத்தான செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் வசூலித்தது செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

30 November 2020, 1:14 pm
highcourt - updatenews360
Quick Share

சென்னை : ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா சமயத்தில் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை.

இந்த நிலையில், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தாமல், தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுமாறும், தேர்வுக்காக செலவிடப்பட்ட விபரங்களை, தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, விபரங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டதோடு, டெல்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், கட்டணத்தை திருப்பி தர வேண்டியது இல்லை என கூறியுள்ளதையும் அண்ணா பல்கலை., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையின் போது, ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்தது செல்லும் எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், இதுவரை செலுத்தாதவர்கள் 4 வாரங்களில் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0