கர்ப்பிணி மனைவியை டீசல் ஊற்றி கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநர்… 2வது மனைவியுடன் குடும்பம் நடத்த போட்ட சதித்திட்டம் அம்பலம்..!!

23 June 2021, 8:57 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூர் அருகே கர்ப்பிணி மனைவியை டீசல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும் அம்பலமாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி(21). இவர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் குடும்பத்துடன் சண்டையிட்டு பெருமாநல்லூர் பகுதியில் தனியாக தங்கி, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கம்பெனியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோ மூலம் போய் வரும்போது ஆட்டோ டிரைவர் கெளதம்(26) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் லட்சுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கோண்டனர். இந்நிலையில் கெளதம், கெளதமின் அப்பா, பெரியப்பா லட்சுமியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு பிரச்சனை செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் லட்சுமி இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று கெளதம் லட்சுமி மீது டீசல் ஊற்றி பற்ற வைத்துவிட்டு, வீட்டை வெளிபக்கமாக தாளிட்டு விட்டு ஓடிவிட்டதாகவும், மீண்டும் திரும்ப வந்த கெளதம் ஆட்டோ மூலம் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று,

பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில், ஒரு வாரம் மருத்துவமனையில் லட்சுமியுடன் கெளதம் இருந்துள்ளார். அதன் பின்னர் லட்சுமியை தனியாக விட்டுவிட்டு கெளதம் திருப்பூர் வந்துவிட்டார். அதன்பின்பு லட்சுமியை சென்று பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆதரவற்ற நிலையில் இருந்த லட்சுமி கோவையிலுள்ள தனியார் காப்பகத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் கெளதம் வேறொரு வடமாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருவதை அறிந்த லட்சுமி, தன்னை ஏமாற்றிய கெளதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லட்சுமி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கெளதமை கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Views: - 304

0

0