15 நாட்களாக தேங்கிய மழைநீர்: திடீரென ஒருபுறமாக சரிந்த 2 மாடிக் கட்டிடம்..!!

21 January 2021, 10:47 am
madurai building - updatenews360
Quick Share

மதுரை: மழைநீர் தேங்கியிருந்ததால் 2 மாடிக் கட்டடம் ஒருபுறமாக சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை தெற்கு வெளிவீதி, மீனாட்சி பள்ளம், காஜா தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது வீட்டின் அருகே 1990ம் ஆண்டு கட்டப்பட்ட வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் தளத்தில் 2 குடியிருப்புகளும், முதல் தளத்தில் 2 குடியிருப்புகளும், 2வது தளத்தில் ஒரு குடியிருப்பும் உள்ளன.

கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்த தொடர் மழையால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த வீட்டின் கிழக்கு பகுதியில் ஒரு புறம் மட்டும் லேசாக பூமியில் இறங்கியது. அதில் வீட்டின் ஒரு பகுதி பக்கத்து வீட்டின் மீது சாய்ந்து நின்றது.

அப்போது அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பெண்ணும், முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவர் ஒருவர் மட்டும் தான் இருந்தனர். அவர்கள் வீடு சரியும் சத்தத்தை கேட்டு அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தனர். வீடு சாய்ந்ததில் வீட்டின் முன்புறம் உள்ள பால்கனி, 2 மாடியில் உள்ள கட்டிடங்கள் சிறிதளவு இடிந்து கீழே விழுந்தன. அதில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

தகவல் அறிந்தும் தெற்குவாசல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லவும், போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர் மழையால் வீட்டின் கட்டுமானம் பலம் இழந்ததால் வீடு சரிந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டை இடித்து அகற்ற வேண்டும் என்று உரிமையாளருக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் ஜெயபால் கூறும் போது, தொடர் மழையால் வீட்டின் முன்பு கடந்த 15 நாட்களாக தண்ணீர் தேங்கி இருந்தது. இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி கீழே இறங்கியது. யார் உயிருக்கும் உடமைக்கும் சேதம் இல்லை. பாதிப்படைந்த வீட்டை உடனே இடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை தொடங்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0