பேரூராட்சி முன்னாள் அதிமுக துணை தலைவர் வெட்டிக்கொலை: பின்னணியில் யார்…??

19 September 2020, 10:37 pm
Quick Share

செங்கல்பட்டு: இடைக்கழி நாடு பேரூராட்சி முன்னாள் அதிமுக துணைத்தலைவரை மர்மநபர்கள் வெட்டிகொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடைக்கழி நாடு பேரூராட்சியின் முன்னாள் அதிமுக துணைத் தலைவராக இருந்தவர் அரசு என்கின்ற ராமச்சந்திரன். இவரை கப்பிவாக்கம் என்ற இடத்தில் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இடைக்கழிநாடு பேரூராட்சியின் முன்னாள் அதிமுக துணைத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் வெட்டிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் தேக்கம் அடைந்தன.

சம்பவத்தைக் கேள்விப்பட்டு விரைந்து வந்த சூனாம்பேடு காவல்துறையினர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். முன்னாள் துணைத் தலைவர் கொலை வழக்கை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் காணப்படுகின்றது. அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.