மனைவிக்காக நண்பனின் குழந்தை கடத்தல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

26 September 2020, 2:39 pm
Tirupur child kidnap- updatenews360
Quick Share

திருப்பூர் : மூன்றரை வயது குழந்தையை கடத்தி சென்ற நிலையில் சேலத்தில் இருந்து குழந்தையை திருப்பூர் காவல் துறையினர் மீட்டு வந்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் , சிவில் இன்ஜினியரான இவர் கட்டிடம் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணி யாற்றி வருகிறார். இவருக்கு கீழ் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர் முருகானந்தத்தின் வீட்டிற்கு சென்று அவரது 3 வயது மகன் நதிஷ்சத்யாவை அப்பா அழைப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

பணி முடிந்து வீட்டிற்கு வந்த முருகானந்தம் குழந்தையை தேடி பார்த்த போது எங்கும் காணாததால் அதிர்ச்சி அடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார் . இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சுரேஷ் குழந்தையை அழைத்துச் செல்வது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சுரேஷின் செல்போன் டவரை வைத்து காவல்துறையினர் சோதனை செய்தபோது அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி வழியே சென்று கொண்டிருப்பதாக தெரிய வந்தது . உடனடியாக சேலம் காவல்துறைக்கு தகவல் அளித்து அவரது புகைப்படத்தை அனுப்பி உள்ளனர்.

சேலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போலீசார் குழந்தையுடன் இறங்கிய சுரேசை கண்டதும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகானந்தம் தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகவும் அதற்குப் பழி வாங்கவே குழந்தையை அழைத்து வந்ததாகவும் மனைவியை திருப்பி கொடுத்துவிட்டு குழந்தையை தர திட்டமிட்டிருந்ததாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் அறிந்து உடனடியாக நல்லூர் காவல்துறையினருடன் முருகானந்தம் சேலம் சென்று குழந்தையை மீட்டு வந்தனர் . ஆனால் சுரேஷின் மனைவிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் பணி செய்யாமல் முன்பணம் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்து குழந்தையை கடத்தி சென்றதாகவும் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் ஊரக காவல் துறையினர் சுரேஷை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.