நில உரிமையாளரை போலீசில் சிக்க வைத்த வாடிக்கையாளர் : அதிரடி திருப்பம்!!

7 November 2020, 2:41 pm
Land - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : விற்பனை நிலத்தை பணம் கொடுத்து வாங்கியவர் போலீசுக்கு அழைத்து நில உரிமையாளரை சிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை டி எஸ்பி அலுவலகம், அருமனை காவல் நிலையம் மற்றும் தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், பனச்சமூடு பகுதியில் காரில் லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காரின் நிறம், பதிவு எண், தயாரிப்பு நிறுவனம் உட்பட அனைத்து தகவல்களையும் கூறியுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் போலீசார் உஷாராகி உடனடி நடவடிக்கையில் இறங்கினர். தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், அருமனை போலீசார் மற்றும் தனிப்படையினர் பனச்சமூடு பகுதிக்கு விரைந்தனர்.

மேலும் அவர் கள் அந்த காரை மடக்கிப்பிடிக்க உச்சகட்ட விழிப்புடன் தயாராக இருந்தனர். அப்போது தொலைபேசியில் மர்மநபர் குறிப்பிட்டஅடையாளங்களுடன் ஒரு கார் வந்தது. போலீசார் உடனடியாக அந்த காரை மடக்கி பிடித்து அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது காரில் இருந்த நபரிடம் பல லட்சத்துக்கும் மேல் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பணத்தை கைப்பற்றி அந்த
நபரை காருடன் அருமனை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில் அந்த நபர் தனது சொத்தை விற்றதாகவும், அதற்கான பதிவு முடிந்து பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு செல்வதாகவும் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் அதை நம்பவில்லை.

மர்ம நபர் தெரிவித்தது போல இது ஹவாலா பணமாகத்தான் இருக்க முடியும். போலீசிடம் இருந்து தப்பிக்க அவர் பொய் சொல்கிறார் என நினைத்தனர்.இருப்பினும் அந்த நபர் கூறிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தனர்.

அப்போது சொத்து பதிவு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்
போன் செய்து தகவல் கூறியவர், அந்த பணம் வைத்திருந்த நபரிடம் இருந்து சொத்தை வாங்கியவர்தான் என்பது தெரிய வந்தது. பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவருக்கு நிலத்துக்கான பணத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் தான் கேட்டபடி நிலத்துக்கான விலையை குறைத்து கொடுக்காததால், ஹவாலா பணம் என
நைசாக போலீசுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை எச்சரிக்க போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவரை தேடி வீட்டுக்கு சென்ற போது தலைமறைவாகி விட்டார். இப்படியாக போலீசாரை
அலைக்கழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 15

0

0