கோவையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் உட்பட 228 பேருக்கு கொரோனா
4 August 2020, 8:06 pmகோவை: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் உள்பட 228 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வந்த இளநிலை உதவியாளர்கள் இருவருக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 22 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பணிமனை மேலாளர் உள்பட 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பணிமனை அலுவலகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டு கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணிமனையில் பணியாற்றி வரும் 30 பேருக்கு இண்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தவிர ஆர்.எஸ்.புரத்தில் 8 பேருக்கும், பீளமேட்டில் 6 பேருக்கும், பொள்ளாச்சியில் 3 பேருக்கும் கே.கே.புதூர், பி.என்.புதூர், வடவள்ளி, சரவணம்பட்டி, துடியலூர், மதுக்கரை, குனியமுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 228 பேருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது.