வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம்.. காதல் கணவனுக்கு கொலை மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு ஜோடி தஞ்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 2:11 pm
Love Pair Police Station -Updatenews360
Quick Share

விழுப்புரம் : போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு திருமணம் செய்த காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நீர்ப்பெருத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 23). இவர் சென்னையில் ஒரு ஆயில் கம்பெனியில் வேலை செய்து வந்தபோது இவருக்கும் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த திருவண்ணாமலை மாவட்டம் புதுஜெயமங்கலத்தை சேர்ந்த உண்ணாமலை என்கிற சுகன்யா (வயது 21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் சுகன்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சுகன்யாவிற்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் சுந்தர்ராஜூவும், சுகன்யாவும் கடந்த 18-ந் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி மறுநாள் திண்டிவனத்தில உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த விஷயம் சுகன்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்களது உறவினர்கள், சுந்தர்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தம்பதி இருவரும் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி மனு கொடுத்தனர்.

Views: - 65

0

0