காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு.. டார்ச் லைட் காண்பித்து விரட்ட முயன்ற போது நிகழ்ந்த சோகம்..

Author: Babu Lakshmanan
15 January 2022, 7:11 pm
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதி ஜே.ஆர்.எஸ் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மசனையன் (வயது 60). இவர் தனக்கு சொந்தமான மானாவாரி தோட்டத்தில் சோளப்பயிர் பயிரிட்டு இருந்தார். வன விலங்குகளிடமிருந்து தனது சோளப்பயிரை பாதுகாப்பதற்காக இரவு நேரத்தில் தோட்டத்தில் காவல் காப்பது வழக்கம்.

இரவு நேரங்களில் வரும் வனவிலங்குகளை பட்டாசு வெடித்தும் தீப்பந்தம் ஏந்தியும் துரத்தி விடுவது இவரது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று சோளக் காட்டுக்குள் புகுந்துள்ளது. டார்ச் லைட் வெளிச்சத்தை பார்த்த காட்டுயானை விவசாயி மசனையனை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதில் தலை நசுங்கி விவசாயி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கிராம மக்கள் இன்று காலை கேர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை செய்து இறந்துபோன விவசாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் மலை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 310

0

0