மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது – சிறு குறு தொழில் முனைவோர் வேதனை..!

1 February 2021, 4:51 pm
COTMA - Updatenews360
Quick Share

கோவை : மத்திய பட்ஜெட்டில் பயனுள்ள அறிவிப்புகள் இல்லை என்றும், எமாற்றம் அளிப்பதாகவும் சிறு குறு தொழிக் முனைவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்ட நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்தாண்டு மத்திய பட்ஜெட். அதன்படி, நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தொழில் நகரான கோவையில் காட்மா மற்றும் கோப்மா தொழில் அமைப்பினர் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காட்மா ( கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம்) சங்கத்தின் தலைவர் சிவக்குமார் கூறுகையில், “குறு மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்கு 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், ஜிஎஸ்டி கணக்கு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் எளிமையாகப்படும், மூலப் பொருட்களுக்கான சுங்கவரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

ஆனால், கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு முடங்கிய தொழில்கள் தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் வேளையில் தொழில் முனைவோர் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த சலுகைகள் அறிவிப்பு இல்லாதது, மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி அதனை குறைப்பதற்கான விரிவான அறிவிப்புகள் இல்லாதது, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லாதது ஆகியவை ஏமாற்றமளிக்கிறது.

வங்கித் துறைக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் உதவியை கொரோனா தடுப்பு ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு, இதுவரை வாங்கினால் எவ்வித உதவியும் கிடைக்காத ஒரு தொழில் முனைவோர்களுக்கு வழங்கி உதவ வேண்டும்.” என்றார்.

இதுகுறித்து கோப்மா ( கோவை பம்ப் செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள்) சங்கத்தின் தலைவர் மணிராஜ் கூறுகையில், ” தமிழகத்தில் சாலை வசதி மேம்பாட்டிற்கு ரூ.1.03 லட்சம் ஒதுக்கீடு செய்ததை வரவேற்கிறோம்.

ஆனால, இந்தியா முழுவதும் உள்ள சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆறு மாத வட்டி காலத் தவணை மட்டுமே மத்திய அரசால் நீட்டித்து தரப்பட்டது. அந்த தவணைக் காலம் முடிந்த அடுத்த நாளே மொத்த வட்டி தொகையை வங்கிகள் அதிரடியாக வசூலித்தன. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் குறுந் தொழில் முனைவோர்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா கலத்தில் நிலுவையாக இருந்த 6 மாத கால வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறவில்லை. மோட்டார் மற்றும் பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி குறிப்புகள் பற்றி எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அதன் மீதான கலால் வரிகள் குறைக்க எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இரும்பு உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களும் கடுமையான விலை ஏற்றத்தின் உச்சியில் உள்ளன. ஆனால் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெடில் எங்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.” என்றார்.

Views: - 1

0

0