பெற்ற மகளுக்கு தொடர் பாலியல் தொல்லை: கொடூர தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

Author: Aarthi Sivakumar
15 May 2022, 5:05 pm
Quick Share

விருதுநகர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் ஜெகஜோதி மணி ( 43). இவர் தனியார் கிளாஸ் ஹவுசில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அன்பு செல்வி(36) தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் 9ம் வகுப்பும், இரண்டாவது மகள் 8ம் வகுப்பும் தனியார் பெண்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

கணவர் ஜெகஜோதி மணி வேலைக்கு சென்றுவிட்டு மதியம் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில் மூத்த மகள் பள்ளிக்கு செல்லாத போது அவரை தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அம்மாவிடமும் தங்கையிடமும் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி, வலுக்கட்டாய பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தந்தையின் தொல்லை தாங்கமுடியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். பள்ளிக்குச் சென்றபோது அந்த கடிதம் தவறி விழுந்து தலைமை ஆசிரியையின்  கைக்கு கிடைத்த படியால் அது குறித்து தாயார் அன்பு செல்வியையும் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமியை அழைத்து தனியாக விசாரித்தபோது, அழுதுகொண்டே தந்தை ஜெகஜோதி மணி செய்த பாலியல் தொந்தரவுகளை கூறியுள்ளார்.

தாயார் அன்புச்செல்வி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில், பெற்ற மகளையே சீரழித்த கணவனை கைது செய்து கடும் தண்டனை தருமாறு புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.

மேலும் இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பரிந்துரையின் பெயரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைத்தனர்.

Views: - 242

0

0