இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக சவுக்கு சங்கர் மீது காவல் ஆணையரிடம் புகார்!!
12 August 2020, 11:50 amஇந்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ள தி.மு.க. ஆதரவாளர் சவுக்கு சங்கர் மீது சட்ட ரீதியாக புகார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமந்த சேனா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காளிமுத்து அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- கடந்த 05ம் தேதியன்று அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய வரலாற்றின் பொன்னேடுகளால் பொறிக்கப்பட்ட இந்த சரித்திர தினத்தினை உலககெங்கிலும் உள்ள எல்லா இந்துக்களும் தனது இல்லத்தில் ஸ்ரீராமர் படத்தையும், உருவச்சிலையையும் வைத்து வழிபட்டனர்.
அதேபோல், மேதகு. தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் அன்றைய தினத்தில் தனது இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராம வழிபாட்டு நிகழ்ச்சியின் படங்களை வலைதளத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து இருந்தார்.
கடந்த 06ம் தேதியன்று இந்த பூமி பூஜையை கேலி செய்யும் விதமாகவும் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை அவமானப்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் நோக்குடன் தி.மு.க (திராவிட முன்னேற்ற கழகம்) கட்சியை சேர்ந்த சவுக்கு சங்கர் என்பவர் கிண்டலடித்து வலைதளத்தில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்களையும், இந்து மக்களையும் புண்படுத்திவிட்டார். மேலும் சவுக்கு சங்கர் அவர்களின் இத்தகைய பேச்சானது நூறு கோடி இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், அவர்கள் வணங்கிவரும் தெய்வங்களுக்கு செய்யும் வழிபாட்டுமுறையை கேலி, கிண்டல் செய்யும் விதமாகவும், இழிவுபடுத்தும் விதமாகவும், மதக்கலவரத்தையும், இன ஒற்றுமையையும், உணர்வையும் சீர்குலைக்கும் விதமாகவும், இதன்மூலம் அமைதியான இச்சமூகத்தின் இந்துக்களிடையே பாகுபாடு ஏற்படுத்தி ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளும் நிலையை உருவாக்கும் விதமாக அவா் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கரின் இச்செயலானது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A&(1),295A-ன்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, சவுக்கு சங்கர் அவர்கள் சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டதன் மூலமாக இந்து மதத்தில் உள்ள வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல், நேரடியாக இந்து மதத்தையும் இழிவு படுத்தியுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறோம், மேலும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த பதிவினை நீக்கி, அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தரும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அரசியல் செய்வதற்காக, தேவையற்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் முன்வைத்து வரும் சவுக்கு சங்கர், நேற்று காவல்துறையையே சாடியுள்ளார்.
அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கூறி வரும், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையை விமர்சித்து அண்மையில் அவர் டுவிட் போட்டது மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியது. பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை, நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் வழக்கம் போல வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கு, பதிலளித்துள்ள சவுக்கு சங்கர், ‘இது காவல் துறையா ! காவித் துறையா ! எஸ்.பி ஆபீஸ்ல, பால்கொழுக்கட்டை செஞ்சு சாயங்காலம் ஒரு பஜனைக்கு ஏற்பாடு பண்ணுங்கோளேன். நன்னா இருக்கும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நெட்டிசன் ஒருவர் அளித்த பதிலில், “காவல்துறை பக்ரீத் கொண்டாடிய போது வராத கோபம், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் போது மட்டும் வருகிறதே? இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா?,” எனத் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, இந்துக்களுக்குள் மோதலை உருவாக்கும் விதமாக சவுக்கு சங்கரின் செயல்பாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில், மத மோதல்களை ஏற்படுத்தும் அவரது எண்ணத்தை இந்த பதிவுகள் அம்பலப்படுத்தியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.