திருப்பூரில் 3வது நாளாக 80 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை: பொதுமக்கள் கடும் அவதி..!!

27 February 2021, 12:08 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 2 பணிமனைகளில் இருந்து குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதன்காரணமாக திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 2 பணிமனைகளில் இருந்து குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டன. இதுபோல் வெளிமாவட்டங்களுக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். தனியார் பஸ்களில் கூட்ட நெரிசலில் பயணித்து தங்களது நிறுவனங்களுக்கு செல்கின்றனர்.

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் மூலமாக பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான டிரைவர்கள் வேலைக்கு வராததால் அரசு பஸ்களை இயக்க முடியாமல் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தே பேருந்துகளில் ஏறி சென்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்கியிருந்து வேலை பார்த்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை வழங்கப்படும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வது உண்டு. ஆனால் பஸ்கள் இயக்கப்படாததால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பனியன் நிறுவனங்களிலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே தொழிலாளர்கள், பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக பஸ்களை இயக்க ஏதுவாக, புதிய டிரைவர், நடத்துனர்களை தேர்வு செய்யும் பணியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆர்.டி.ஓ., அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வேலைக்கு காத்திருப்போர் பட்டியலை சேகரித்துள்ளனர்.

இதற்கு முன் அரசு பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அரசு பஸ்சை இயக்கிய டிரைவர், நடத்துனரை தேடி பிடித்து, அவர்களது செல்போன் எண்ணை பெற்று, அழைப்பு விடுத்து வருகின்றனர். இவ்வாறு, திருப்பூர் மண்டலத்தில் 37 பேரை தேடிபிடித்து, இயக்க செய்தனர்.

Views: - 10

0

0