கலவை மருத்துவத்துக்கு எதிர்ப்பு : கோவையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்!!

1 February 2021, 12:26 pm
Cbe IMA - Updatenews360
Quick Share

கோவை : கலவை மருத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள ஐ.எம்.ஏ. வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை தலைவர் ராஜேஷ் பாபு கூறியதாவது:- கலவை மருத்துவமான (மிக்‌சோபதி) ஆயுர்வேதம், சித்த மருத்துவம் படித்தவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்ய மருத்துவ குழுக்கள் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் மூலம் எம்எஸ் பட்டம் கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுகிறது. போதிய அனுபவம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வதால் பொதுமக்களுக்கு ஆபத்தில் முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் ஒரு சில நோய் தொற்றுகளில் இருந்து நோயாளிகளை காக்க அவர்கள் எந்தவிதமான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அவர்களால் எப்படி நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே கலவை மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் 100 இடங்களில் உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8 இடங்களில் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. மிக்சோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக் கூடாது. இதனை வலியுறுத்தி பைக் பேரணியும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மருத்துவக்கல்லூரி மாணவி ஸ்ருதி அரவிந்த் கூறுகையில், ” மிக்சோபதி அறுவை சிகிச்சையை அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு முறையான மருத்துவம் அளிக்க முடியாது. நீட் தேர்வு எழுதி சிரமப்பட்டு எம்பிபிஎஸ் சீட் பெறும் இந்த சூழலில் எங்களைப்போன்ற மாணவ மாணவிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கலவை மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது.” என்றார்.

இந்த உண்ணாவிரதத்தில் இந்திய மருத்துவ சங்க மாநில செயலாளர் ஏகே. ரவிக்குமார், டாக்டர்கள் மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0