காஞ்சி அரசு மருத்துவமனையில் நிமோனியா வைரஸ் அச்சுறுத்தல்… மூடப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் வார்டு… கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார்..!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 9:07 am
Quick Share

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் நிமோனியா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் தற்காலிகமாக வார்டு மூடப்பட்டது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த உள் மட்டும் புறநோயாளிகள் 2000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றது. இந்த வளாகத்தில் அருணா மித்ரா, மோகன்ராஜ் , பார்வதி, சுரேந்தர் என நான்கு மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

அதேபோல் பச்சிளம் குழந்தைகள் பிரிவில்15 செவிலியர்கள் தேவைப்படுகின்ற இடத்தில் வெறும் 8 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர் .மருத்துவமனை ஊழியர்களும் வெறும் 6 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் முதல் தளத்தில் லேபர் வார்டு எனப்படும் பிரசவ வார்டும், இரண்டாம் தளத்தில் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவும், மூன்றாம் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவும், நான்காம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவும் செயல்பட்டு வருகின்றது.

பச்சிளம் குழந்தைகள் பிரிவு உட்பட நான்கு தளத்திலும் ஆட்கள் பற்றாக்குறையால் பிரசவத்துக்கு வருகின்ற கர்ப்பிணி பெண்களை, பிரசவத்துக்கு முன்பும் பின்பும் சரியாக கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்துள்ளது. 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் நல சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுகின்ற குழந்தைகளை பரிசோதித்த நோடல் ஆபீசர் சீனிவாசன் அவர்கள் குழந்தைகளுக்கு நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது என எச்சரிக்கை செய்துள்ளார்.

மேலும் மிகவும் பாதுகாக்கப்பட கூடிய இந்த வளாகத்தில், ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக பணி புரிகின்ற ஆட்கள் இல்லாததாலும், சுகாதாரம் மிகவும் பின்தங்கி உள்ளதாலும், நான்காவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் நிமோனியா வைரஸ் தொற்று கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பரவி உள்ளது என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிரிவில் இருந்த அறுபத்தி ஐந்து குழந்தைகளில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு 5 பச்சிளம் குழந்தைகள் அனுப்பியது போக, மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளை முதல் தளத்தில் உள்ள பிரசவ வார்டிலும், வளாகத்தின் வெளியே உள்ள குழந்தைகள் வார்டிலும் அனுமதிக்கப்பட்டுளளனர்.

இந்நிலையில் 4வது மாடியில் இயங்கி வரும் பச்சிளம் குழந்தைகள் வார்டில் கடந்த ஒரு மாதமாக நிமோனியா வைரஸ் தொற்று பரவி பச்சிளம் குழந்தைகளை பாதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 9 குழந்தைகளில் 3 பச்சிளம் குழந்தைகள் சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் நல சிகிச்சை மையத்திலும், இரண்டு பச்சிளம் குழந்தைகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக இந்த வார்டு மூடப்பட்டுள்ளது. Fumigation எனப்படும் கெமிக்கல் புகையால் சுத்தம் செய்யப்பட்டு சுமார் 72 மணி நேரம் இந்த பிரிவு மூடப்பட்டு, பின்னர் நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும். அதில் நெகட்டிவ் என சான்று கிடைத்தால் மட்டுமே மீண்டும் இந்தப்பிரிவு திறக்கப்படும். அதுவரை இந்த வார்டு மூடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த தொற்று ஏற்பட மிக முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால், அந்தந்த வார்டுக்கு உட்பட்ட செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அனைத்து வார்டுகளுக்கும் செல்வதாலும், கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் அனைத்து தளத்திற்கும் சென்று வருவதாகவும், இந்த நிமோனியா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகள் வார்டு மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு வெண்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் கருவிகளை வைத்து சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத மருத்துவர் தெரிவித்தார்.

சமீபகாலமாக மருத்துவமனையின் நிர்வாகம் சரியான முறையில் செயல்படாததால் இது போன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

Views: - 408

0

0