அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: கருணாஸ் அறிவிப்பு…!!

6 March 2021, 5:13 pm
karunas1 - updatenews360
Quick Share

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக கருணாஸ் அறிவித்துள்ளார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ், அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏப்ரல் 6ம் தேதி அன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக கருணாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருசில தலைவர்கள் நாங்கள் சார்ந்த சமுதாயத்தை குற்றப்பரம்பரையினர் என கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். அவை மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல, கொற்றப் பரம்பரை.

அடிப்படை இட ஒதுக்கீடு கோரி நீண்ட நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மறுக்கப்படுகின்றன. அன்புமணி, முதலமைச்சரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர்களின் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுகின்றன.

அதனால், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முக்குலத்தோர் புலிப்படை, அதிமுக கூட்டணியிலிருந்து விடுவித்துக் கொள்கிறது. எங்கள் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கும் 84 தொகுதிகளில் இளைஞர்களை ஒன்றிணைத்து நானே களமிறங்கி எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம். நாங்கள் இல்லாமல் எவரொருவரும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை எடுத்துக் காட்டுவோம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, சட்டப்பேரவை உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்கிறார் பழனிசாமி. ஆனால், என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்தது. கூவத்தூரில் ஜெயலலிதாவின் உருவப்படத்தின் முன் அகல் விளக்கை வைத்து, சசிகலாவிடம் சத்தியம் செய்ததை அவர்களால் மறுக்க முடியுமா? நானும் தனியரசுவும் அப்போது இருந்தோம். நாங்கள் இருவரும்தான் சத்தியம் செய்யவில்லை. ஏனென்றால் நாங்கள் இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்ன சத்தியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கும் சசிகலாவுக்கும் தான் வெளிச்சம்

இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

Views: - 23

0

0