வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்: மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
2 December 2021, 9:55 am
Quick Share

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், புயலாக வலுப்பெற்று ஆந்திரா- ஒடிசா இடையே டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘ஜாவித்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர்தான் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவித்’ என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 5ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Views: - 232

0

0